கிருஷ்ணன் கவிதைகள்
[A series of writing dedicated to Sri Premikavaradhan Madhurisakhi and H.H. Sri Sri Muralidhara Swamiji, by Priya ji, Singapore Namadwaar]
கண்ணன் என் கைக்குழந்தை!!
(ByYashodha)
அன்புள்ள கண்ணா நலமா?
உன் பிறந்தநாள் வருகிறதென்று
ஊரே குதூகலித்துக்கொண்டிரு க்கிறது.உன்னை பெற்றவள் நான் மட்டும் என்னசும்மா இருப்பேனா?
உனக்குப்பிடித்த மஞ்சள் பட்டு ஏதும் எடுக்கவில்லை.. ஆனால் என் இதயத்தறி கொண்டு கவிதைபட்டு நெய்து வைத்தேன் உனக்காக... வந்து அள்ளிக்கொள்வாயா!!!
என் மழலை கண்ணா!!
எந்த ஜென்மத்தில் செய்த பக்தியோ… தெய்வமே என் மடியில் மழலையாய் தவழ்ந்தது!!
தயிரை கடைந்து வெண்ணை எடுப்பவள் தான் நான் !!
என் உயிரை கடைந்து உன்னை எடுத்தேன் !!
பால் வடியும் வதனம் கொண்டவனே ..
தேன் தெறிக்கும் அதரங்கள் கொண்டவனே !!
அதென்ன உன் முகத்தில் இரண்டு விண்மீன்கள்?
ஓ!! அவை உனது
விழி மீன்களோ!!!
இவ்வுலகமே அறியும்…
சூரியனிடமிருந்து தான் கிடைக்கும் நிலவுக்கு ஒளி என்று!!
நான் மட்டுமே அறிவேன் உன் கண்களில் மின்னும் ஜோதிக்கு முன்னால் அந்த சூரியனும் ஒரு துளி என்று!!
இதழ்களில் தேனை வைத்திருப்பவனே..
நீ பேசும் ஒவ்வொரு வார்த்தையும் அமிர்தத்தில் நனைத்து எடுத்தது தானோ!
என் தேனே!!
மொழியும் தீஞ்சுவையாவது நீ பேசும்போது தான்!!
நீ அம்மா என்று அழைக்கும் அந்த நொடி ... அடடா!! இரண்டு வரியில் சொன்னால்...
செவி வழி புகுந்தது அமிர்தத்தின் ஒரு துளி!!
என் விழி வழி கசிந்தது உயிரின் மறு துளி!!
ஆமாம்!! நீ என்னை அழைத்துவிட்டால் போதும்.என் உயிர் உருகி கரைந்துவிடுகிறது..
நீ துயில் கொள்ளும் அழகு பற்றி சொல்லியே தீர வேண்டும்!!
குழந்தைகள் தூங்கினால் தெய்வம் தூங்கும் காட்சி இப்படி தானோ என்று மனிதர் நினைப்பதுண்டு!! கண்ணா!! தெய்வமே தூங்கும் காட்சி காணக்கிடைத்தது எனக்கு மட்டும் தான்!!
நான் எத்தனை பாக்கியசாலி!!
என் மாலேமணிவண்ணா!!
உனக்கு தெரியுமா...நீ துயில் கொள்ளும் அழகை இரவு முழுதும் ரசிக்கும் ஆர்வத்தில்
இரவுப்பொழுதை உறங்கி நான் வீணாக்குவதே இல்லை!!
உன் அழகு தரும் ஆற்றல்… அதீதம்!! அதீதம்!!
இருந்தும் சில சமயங்களில் தோன்றும் …!!
உன்னோடு நான் கண்ட அனுபவத்தை எல்லாம் தேக்கிவைக்க என் இதயத்தில் வழி இல்லையே!!
விளக்கிச் சொல்ல என் வார்த்தைக்கு மொழி இல்லையே!!
கண்ணா.. உனக்கு நினைவிருக்கிறதா?
அன்று நீ மண்ணை தின்றுவிட்டாய் என்று
உன் அண்ணன் சொல்லியதும்..
உன் வாய்திறக்க சொன்னேன்!!
"உலகம் படைத்தவன் வாயில் உலகம் தெரிவது இயல்பு தானே" என்றறியாமல்
பிரபஞ்சத்தை காட்டிய உன் வாய் கண்டுகுழம்பிப் போய் நின்றேனே !! உன் தாய் ஒரு பேதையடா!!
உன் குறும்புத்தனத்தை எல்லாம் உள்ளூர ரசிப்பவள் தான் நான்!!
இருந்தும், நீ வெளியே செல்வதை தடுக்கும் நோக்கத்தில் உன்னை உறியில் தான் கட்டிவைத்தேன்!!
நீயோ என்னை உன் உயிரில் கட்டினாயடா!!
மாடு மேய்க்க உன் தோழர்களோடு காடு நோக்கி செல்வாயே!!
உன்னைப்பிரிய நேரும் அந்த துயரத்திலிருந்து விடுபட,
உன் தோழனாய் அல்ல..
ஒரு கால்நடையாய் மாறி உன்னோடு நானும் காட்டுக்கு வர நினைப்பதுண்டு !!
கிருஷ்ணா, என் குழந்தையே !!
இறந்த பின் தான் மோட்சம் என்று யார் சொன்னது??
உன்னோடு வாழ்ந்த வாழ்கையே மோட்சம் தானடா!!
கண்ணா.. உன்னிடம் சில வரங்கள் வேண்டும்..தருவாயா??
நீ சுவாசித்து வெளிவிடும் காற்று போதும்.. நான் சுவாசிக்க !!!
உன் திருவடி மட்டும் போதும்.. நான் யாசிக்க !!
கண்ணா கண்ணா என்ற உன் திருநாமம் மட்டுமே போதும்.. நான் வாசிக்க!!
உன் பூமுகம் மட்டும் போதும்.. நான் நேசிக்க!!
உன் அன்பொன்று போதும்.. நான் உயிர் வாழ!!
உன் இதயத்துடிப்பாய் நான் மாற வரம் கொடுடா!!
நான் அன்னையா அல்லது உன் பக்தையா சில சமயங்களில் எனக்கே குழப்பம்!!
உனக்கே தெரியும்!!
நீயே நானானால் கூட என்னைப் போல உன்னை நேசிக்க உன்னால் கூட முடியாது!!
I love you krishna!!!
Happy birthday my dear!!
உயிர் எங்கே ஒளிந்திருக்கிறது??
மனிதனின் உடலில் இருக்கும் பத்து கோடி செல்களில்
எந்த செல்லில் உயிர் ஒளிந்திருக்கிறது என்று
விஞ்ஞானிகள் தேடிகொண்டிருகிரார்களாம்..விடு!..
அவர்களுக்கெங்கே தெரியப் போகிறது?
என் உயிர் ஓடி ஒளிந்திருப்பது..
உன் உதட்டோரப்புன்னகையில் தான் என்று!!
பக்தி எனும் முத்து
உள்ளம் எனும் சிப்பியில்
பகவத் நாமா எனும் ஒரு துளி விழுகையில் தான்
உள்ளிருக்கும் பக்தி இறைவனை அலங்கரிக்கும் நல் முத்தாகிறது
முக்திக்கும் அதுவே வித்தாகிறது
ரிங் டோன்
இதயத்துடிப்பில் இப்போது இருக்கும்
ரிங் டோன் பிடிக்கவில்லை.
அதை நாமா டியூன் ஆக்க யாராவது
வழி சொல்லுங்களேன்.!!!
புன்னகை
அழகான கவிதை படிக்கும் போதெல்லாம் உதட்டோரத்தில் புன்னகை வருமாம்..
நீ ஏன் கிருஷ்ணா, எப்போதும் புன்னகைத்தபடியே நிற்கிறாய்?
நாங்கள் சொல்லும் நாமா எல்லாம் உனக்கு கவிதையாய் தெரிகிறதா?
இதயம்
பாலைவனத்தில் இருப்பதனால்
தாகம் தவிர்க்க
ஒட்டகத்திற்கு மூன்று இரைப்பைகளாம்..
ஒன்றில் தண்ணீர் தீர்ந்தால் இன்னொன்றிலிருந்து
எடுத்துக்கொள்ளுமாம்.
கிருஷ்ணா, நீ ஒரு கஞ்சன்.
எனக்கு மட்டும் ஒரு இதயம் மட்டுமே
கொடுத்திருக்கிறாய்.
நாமா தாகம் தீர இன்னும் சில இதயங்கள் கொடு.
நாமா இருக்கு எனக்கு !!!
பெற்ற தாய் தகப்பன்
தள்ளி வைத்துவிட்டார்கள் என்னை
கவலை இல்லை..
நாமா இருக்கு எனக்கு !!
சொந்த பந்தம்
எள்ளி நகையாடுது என்னை..
கவலை இல்லை..
நாமா இருக்கு எனக்கு !!
பெற்ற பிள்ளைகள்
மதிப்பதில்லை என்னை..
கவலை இல்லை..
நாமா இருக்கு எனக்கு !!
கட்டிய மனைவி
திட்டுகிறாள் என்னை
"பிழைக்கத் தெரியாத மனுஷன்"
கவலை இல்லை..
நாமா இருக்கு எனக்கு !!
ராப்பகலா உழைக்கிறேன்
தகுந்த கூலி இல்லை
கவலை இல்லை..
நாமா இருக்கு எனக்கு !!
வேற வேலை தேடுறேன்
இன்னும் கிடைக்கலை
கவலை இல்லை..
நாமா இருக்கு எனக்கு !!
வீடு வாசல் கட்டல
சொத்து சுகம் சேர்க்கலை
கவலை இல்லை..
நாமா இருக்கு எனக்கு !!
என்னை அழைக்க
எமன் வந்துட்டான்
கவலை இல்லை..
நாமா இருக்கு எனக்கு !!
சொர்க்கத்துல இடம் இல்லையாம்
நரகம் கொண்டு போறாங்களாம்
கவலை இல்லை..
நாமா இருக்கு எனக்கு !!
நாமா கேளீர் நெஞ்சங்களே!!
மனமுருகி மகிழ வைக்கும் நாமா கேளீர் மயில்களே
நெஞ்சுருகி நெகிழ வைக்கும் நாமா கேளீர் நெஞ்சங்களே
இதயம் இளகி கிறங்க வைக்கும் நாமா கேளீர் இதயங்களே
கண்கள் பனித்து கன்னம் சிவக்க வைக்கும் நாமா கேளீர் கண்மணிகளே
உள்ளம் குழைத்து குளிர வைக்கும் நாமா கேளீர் உயிர்களே
நாமா பாடும் நாவுக்கு பேச்சு என்றும் நின்று போவதில்லை.. நன்றாய் பாடுங்கள் !!!
நாமா பாடும் குரல் தேன் போலாகும்.. இனிதாய் பாடுங்கள்...!!!
நாமாவுக்கு தாளம் தட்டும் கரங்கள் பொற்கரங்கள் ஆகும்!!!
நாமாவுக்காய்,
நாமாதுவாருக்காய்,
சத்சங்கதுக்காய் நடக்கும் பாதங்கள் நோவதில்லை...
வாருங்கள் !!
கண்ணனை நாடுங்கள் !!
மறு ஜென்ம அவஸ்தையில்லை..!!
பாவமெல்லாம் புண்ணியமாகும்
மாய வித்தை பாருங்கள்...!!
தேவாதி தேவனின் திருநாமம் பாடினால்
சேராத செல்வமெல்லாம் வந்து சேரும் !!
அவன் புகழ் பாடுங்கள் !!
அவன் திருவடி காணுங்கள் !!
பூலோக ஸ்வர்க்கம் சேருங்கள்
புண்ணிய ஜீவர்களே !!