இப்படிக்கு கிருஷ்ணன்!!! – Conversation series with God Part 3

[A series of writing dedicated to Sri Premikavaradhan Madhurisakhi and H.H. Sri Sri Muralidhara Swamiji, by Priya ji, Singapore Namadwaar]

Read complete series here

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே 

---------- இப்படிக்கு கிருஷ்ணன்!!! - ஹைக்கூ 9 ------------

பக்தன் : நீ இல்லாத இடம் என்று ஏதேனும் இருக்கிறதா கண்ணா?

கிருஷ்ணன் : ம்ம்ம்..

பக்தி இல்லாத இதயத்தில் நான் இருப்பதே இல்லை...
அது ஒரு மலட்டு இதயம்....அதில் நான் துடிப்பதில்லை...
அது ஒரு வறண்ட பூமி அதில் நான் பூப்பதில்லை...
அந்த  இதயத்திற்கு  நான் இடம் பெயர்வதே இல்லை..
எனவே இந்த ஜென்மத்தில் நீ பக்தியோடு இருந்தால், பெருமைப்படு...!!

---------- இப்படிக்கு கிருஷ்ணன்!!! - ஹைக்கூ 10 ------------

பக்தன் : இறைவா..
ஒரு மனிதன் இதயத்தில்
நீ குடிபுக வேண்டுமானால் ,
அந்த மனிதனின் தகுதி என்ன?

கிருஷ்ணன் : பெரிதாக எதுவும் செய்யவேண்டியதில்லை..
அவன் அனுதினமும் சொல்லும் நாமாவே
என்னை அவனிடத்திலும் அவனை என்னிடத்திலும்
கொண்டு வந்து சேர்க்கும்..

---------- இப்படிக்கு கிருஷ்ணன்!!! - ஹைக்கூ 11 ------------

பக்தன் : காதலில் தோல்வி அடைந்தவன்
உயிர் விட துணிவது இயற்கை!!
பக்தியில் தோல்வி அடைந்தவனின் நிலை என்ன கிருஷ்ணா?
நீயே கொல்வாயா?
சம்மதம் தான்...!!
உன் கையால் மடிந்தால் சுவர்க்கம் தானே அவனுக்கு...!!

கிருஷ்ணன் : ஹாஹாஹா...
அப்படி இல்லை...
உண்மையான பக்தனிடத்தில், நான் தான் தோற்கிறேன்...
அவனது பக்தியை சோதிப்பதில்
ஒவ்வொரு முறையும்
நான் தோல்வியையே தழுவுகிறேன்...
பிறகு அவன் சொல்லும் நாமாவால்
நான் என் தோல்வியிலிருந்து மீள்கிறேன்!!!

---------- இப்படிக்கு கிருஷ்ணன்!!! - ஹைக்கூ 12 ------------

பக்தன் : உண்மையான பக்தனை
நீ எவ்வாறு அடையாளம் கண்டு கொள்வாய் கிருஷ்ணா??

கிருஷ்ணன் : ஹரி நாமத்தையோ ராம நாமத்தையோ
ஒருமுறை சொன்ன அளவிலேயே
ஒருவனுக்கு மயிர்க்கூச்செறியுமானால்,
ஆனந்தக் கண்ணீர் வழியுமானால்,
அவனே எனது உண்மையான பக்தன்..
அவனே எனக்கு மிகவும் பிரியமானவன்..
அவனை விட்டு நான் பிரிவதே இல்லை

---------- இப்படிக்கு கிருஷ்ணன்!!! - ஹைக்கூ 13 ------------

பக்தன் : என் உயிர் தெய்வமே!!
ஒருவன் நாமாவை எப்படி எல்லாம்  சொல்ல வேண்டும்?

கிருஷ்ணன் :வாய் மணக்க மணக்க நாம சொல்
செவிகள் இனிக்க இனிக்க நாம சொல்
நாக்கு தித்திக்க தித்திக்க நாம சொல்
கண்கள் பனிக்க பனிக்க நாமா சொல்
இதயம் இளக இளக நாமா சொல்
உள்ளம் உருக உருக நாம சொல்
நெஞ்சம் நெகிழ நிகழ நாம சொல்
பக்தி பெருக பெருக நாம சொல்
வாழ்வு தழைக்க தழைக்க நாமா சொல்
ஜீவன் பிழைக்க பிழைக்க நாம சொல்
ஐம்புலனும் சுகிக்க சுகிக்க நாமா சொல்
இறுதியாய்...
ஆத்மார்த்தமாய் நாமா சொல்.

---------- இப்படிக்கு கிருஷ்ணன்!!! - ஹைக்கூ 14 ------------

பக்தன் : நாமா சொன்னால் நாவு தித்திக்கும் என்கிறார்களே...
அது கொஞ்சம் மிகைப்படுத்தி சொல்வது தானே?
நிஜமாகவே தித்திக்குமா கண்ணா?

கிருஷ்ணன் : ஜுரம் வந்தவனுக்கு எவ்வளவு இனிப்பு கொடுத்தாலும்
கசக்கத்தானே செய்யும்?

குற்றம் அந்த இனிப்பிலா அல்லது அவனின் நாவிலா?

(குழைகிறான் கண்ணன்.. நெளிகிறான் பக்தன்)

--------------------------------------- இப்படிக்கு கிருஷ்ணன்!!! --------------------------------------

அபிரமிபட்டருக்கும்  கிருஷ்ணருக்கும் நடந்த
சுவாரசியமான உரையாடல் இது..

அபிரமி பட்டர் :  கண்ணா...
என்ன உணவு படைத்து உன்னை வழிபட வேண்டும் ?

கிருஷ்ணன் : அவல் பாயசமும் சுண்டல் கடலையும் எனக்கு பிடித்தவை..

அபிரமி பட்டர் : ஆனால், அதை செய்ய எனக்கு வசதி போதவில்லை என்றால் ?

கிருஷ்ணன் : சிறிது அரிசியும் வெள்ளமும் வைத்தால் போதும்..

அபிரமி பட்டர் : அதுவும் முடியவில்லை என்றால்?

கிருஷ்ணன் : ஒரு துளசி இலையும் , ஒரு துளி ஜலமும் இருந்தால் போதும்..

அபிரமி பட்டர் : அதற்கும் வழி இல்லை என்றால் கண்ணா?

கிருஷ்ணன் : என்னால் ஏதும் தரமுடியவில்லை என்று
இரண்டு சொட்டு கண்ணீர் விடுவாயே.. அது போதும் எனக்கு..
அந்த பக்தியை நான் மனப்பூர்வமாக ஏற்கிறேன்....

(இதைக் கேட்டதும் , அபிராமிபட்டர்
உள்ளம் உருக நெஞ்சம் நடுங்க
பக்தி பெருக கண்ணீர் மல்க
கிருஷ்ணரின் பாதத்தில் விழுகிறார்)

--------------------------------------- இப்படிக்கு கிருஷ்ணன்!!! --------------------------------------

நாரதருக்கு ஒருநாள் ஒரு கேள்வி எழுந்தது..
அவர் கிருஷ்ணரை பார்த்து கேட்டார்..
"கிருஷ்ணா!!  மூச்சுக்கு முன்னூறு  முறை  நாராயணா நாராயணா என்று நாம் சொல்கிறோம்..
ஆனால் அர்ஜுனனை தானே நீ உன் உள்ளத்தில் வைத்து கொண்டாடுகிறாய்...காரணம் என்ன பிரபோ?

கிருஷ்ணர் எதுவும் பேசவில்லை..
அர்ஜுனன் உறங்கிக்கொண்டிருந்த அந்த இடத்திற்கு
நாரதரை அழைத்துக்கொண்டு சென்றார்.
அந்த இடத்தில் தரையில் ஒரு முடிக்கற்றை கிடந்தது..
அது அர்ஜுனனின் தலையிலிருந்து உதிர்ந்ததாகும்..

கிருஷ்ணன் நாரதரைப் பார்த்து "நாரதா, அந்த முடிக்கற்றையை  எடுத்து உன் செவிக்கருகில் கொண்டு செல்.." என்றார்.
.நாரதரும் அவ்வாறே செய்தார்.

என்ன ஆச்சர்யம்...!!! அதிலிருந்து "கிருஷ்ணா!!! கிருஷ்ணா!! என்ற மெல்லிய ஓசை வந்தது..

அர்ஜுனனின் தலைமுடி கூட கிருஷ்ணனின் நாமாவை சொல்லிகொண்டிருந்தது..
நாரதருக்கு அப்போது உண்மை புரிந்தது..

(உங்களுக்கு?)

Leave a Reply